Monday, June 11, 2012

உன் கண்ணீரை ஏந்தினால்

உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில் நிலவின் துணை
கொண்டு எழுதிய கவிதை இது


தயவு செய்து வாசித்து விடாதே
உன் கண்ணீரை ஏந்தினால் என்
கவிதை இறந்து விடும்


காலங்கள் கரைந்தாலும் கரை
சேராத நதியாய் தேங்கிய படியே
கிடக்கிறது என் காதல் உன்னால்


காதல் எனும் வானத்தில் நாமிருவரும்
பறந்து திரிந்த காலங்களை எண்ணிய படியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்


என் காதல் உன்னை மட்டும் காதலிக்க
கற்றுத்தரவில்லை உன்னைத்தவிர யாரையும்
காதலிக்ககூடாது என்பதையும் தான் கற்றுத்தந்தது


உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை
நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு
விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின்
அழுகுரல் தான்


உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ
என்னோடு இருந்த போது ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் இருந்தது என் வாழ்க்கை என்று


நீ மறந்திருக்கக்கூடும் நான் உன் இதயத்தை
காதலால் தான் வாங்கிக்கொண்டேன் என்பதை
ஆனால் நான் மறக்கவில்லை நீ வார்த்தைகள்
எனும் அடியாட்களைக்கொண்டு என்னை
அகதியாய் விரட்டி அடித்ததை


என்றோ ஓர் நாள் யாரோ ஒருவனுக்கு
சொந்தமாகப்போகும் உன் இதயத்தில்
சில மாதங்கள் வாழ்ந்ததில் சந்தோசப்படாலும்


உன் இதயத்தில் தொடர்ந்து வாழ
வாய்ப்பில்லாமல் போனதை விட
உன் இதயத்தில் நான் இறக்காமல்
போனதில் கவலை தான் எனக்கு


உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது
என் பேனா மட்டும் தான் பாவம் அது நான்
அழுதால் உடனே அழ அரம்பிக்கிறது இருவரில்
யார் அழுதாலும் உன்னால் குறையப்போவது
எங்கள் அயுள் தானே


பாவப்பட்டவனின் கைக்கு விலை போன
பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்


இன்று என்னை விட என் பேனா அதிகமாக
அழுகிறது பாவம் நான் எனக்கிருக்கும்
உறவை அழ விட்டு விட்டு என்ன செய்யப்
போகிறேன் எனவே உனக்கு சொல்ல
வந்ததை சொல்லி விடுகிறேன்


இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி என்னைக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்


முடிந்தால் நான் இறந்த மூன்றாம் நாள்
வா காதல் சாம்பலோடு என்னை சேர்த்து
அள்ளலாம்






No comments:

Post a Comment